மும்பையில் தாயை கொன்ற மகன்: விசாரணையில் நீடிக்கும் மர்மம்
மும்பையில் தனது தாயை கொடூரமாக 9 முறை குத்திக் கொலை செய்த சித்தாந்த் காவல்துறை விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் விசாரணையில் மேலும் மர்மம் நீடிக்கிறது.
மும்பையை சேர்ந்த போலீஸ் ஆய்வாளர் தியானேஸ்வர். இவரது மனைவி திபாலி. இவர்களது மகன் சித்தாந்த்(19) கல்லூரியில் படித்து வருபவர். தியானேஸ்வர், இந்தியா முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை குழுவில் இடம் பெற்றிருந்தவர். இந்நிலையில் அவரது மனைவி, அவர்களின் மகனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பணம் தொடர்பாக திபாலிக்கும் மகன் சித்தாந்திற்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சித்தாந்த் தனது தாயை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பித்ததாக தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாயை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்று விட்டு அதன் அருகே ரத்தத்தால் ஸ்மைலி வரைந்திருக்கிறார் சித்தாந்த். மேலும் அதன் அருகே, ‘அவரால் சோர்வடைந்துவிட்டேன். என்னைப் பிடித்து தூக்கிலிடுங்கள்’ என எழுதிவிட்டு சென்றுள்ளார்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட சித்தாந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று மும்பைக்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
விசாரணையில், தனது தாய் கல்லூரி மதிப்பெண் சான்றிதழை தினமும் கேட்டு மிகவும் தொந்தரவு செய்ததாகவும், சித்தாந்த் தேர்வே எழுதாததால் மதிப்பெண் சான்றிதழை வாங்கி வரவில்லை. எனவே திபாலி தானே கல்லூரிக்கு வந்து மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்க்க போவதாக கூறியுள்ளார். இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளானதாக சித்தாந்த் விசாரணையில் கூறினார்.
மேலும், தனது பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்தது தனக்குப் பிடிக்கவில்லை, அதனால் தனது தாயை கொலை செய்ததாக சித்தாந்த் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்யும் போது அவர் அணிந்திருந்த சட்டை இன்னும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை.
தீபாலி சடலத்தின் அருகே ரத்தத்தால் எழுதப்பட்டிருந்த’அவரால் சோர்வடைந்துவிட்டேன். என்னைப் பிடித்து தூக்கிலிடுங்கள்’ என்ற வாசகங்களில் உள்ள கைரேகையையும் சித்தாந்த் கைரேகையையும் ஒப்பிட்டுப் பார்க்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிறகு, சித்தாந்த் மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, சித்தாந்த் அவரது தாயை மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார், இவ்வழ்க்கில் தீவிர விசாரணை தேவைப்படுகிறது என்று கூறினார்.