ஈகோ மோதல்: சிலிண்டரால் அடித்து செஃபை கொன்றார் வெயிட்டர்!
ரெஸ்டாரன்ட்டில் ஏற்பட்ட பிரச்னையில் செஃபை சிலிண்டரால் வெயிட்டர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பிவண்டி பகுதியில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு செஃபாக இருந்தவர் அபிஜித் ராய்.
கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் இங்கு வேலையில் சேர்ந்தார். இங்கு வெயிட்டராக
வேலை பார்ப்பவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சித் குமார் (26). ஓட்டலில் சாப்பிட ஆட்கள் வந்தால் செஃபை,
‘சீக்கிரம் பண்ணுங்க... இதை பண்ண இவ்வளவு நேரமா?’ என்று விரட்டுவாராம் வெயிட்டர். ஒரு செஃபை, வெயிட்டர்
விரட்டுவதா என்கிற ஈகோவில் இரண்டு பேருக்கும் அடிக்கடி பிரச்னை வந்திருக்கிறது.
நேற்று முன்தினமும் பிரச்னை வர, ரெஸ்டாரன்ட் முதலாளி அதை தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் இரவில்
தூங்கும்போது பிரச்னை மீண்டும் வெடித்தது. ’கிச்சனுக்குள்ள நீ எப்படி வரலாம்?’ என்ற செஃப் கேட்க, ’அப்படித்தான்
வருவேன்’ என்று குமார் சொல்ல, அடிதடியில் இறங்கினர். பின்னர், குமார் அருகில் இருந்த கேஸ் சிலிண்டரை தூக்கி
ராயின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த ராய், ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார் ராய். தப்பியோடிவிட்ட குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.