பாலியல் டார்ச்சர் இளைஞனை அவன் வழியில் வளைத்த பெண் போலீசார்!
மும்பை அருகிலுள்ள கிழக்கு பாந்த்ராவைச் சேர்ந்த மாணவி சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. அம்மாவின் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கும் இவர், சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கிறார். இவருக்கு கைலாஷ் காயல் (27) என்பவரிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தது. ஏற்றுக்கொண்டார் சுஜா. இருவரும் அடிக்கடி அதில் பேசிக்கொண்டனர்.
இந்நிலையில் தற்செயலாக போனைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர் அம்மா. அப்போது மகள் சாட் செய்த விஷயங்கள் அவருக்குத் தெரிய வந்தது. அடிக்கடி போனிலேயே இருக்கும் மகள், எல்லைத் தாண்டாமல் இருக்க அவ்வப்போது போனை கண்காணிக்கத் தொடங்கினார். ஒரு நாள் அந்த ’இன்ஸ்டா நண்பன்’, தன்னுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்று சுஜாவிடம் கேட்டுள்ளான். அதோடு ஆபாச வீடியோக்க ளையும் புகைப் படங்களையும் அனுப்பியுள்ளான்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுஜாவின் அம்மா, என்ன செய்யலாம் என்று யோசித்தார். கேர்வாடி போலீசில் புகார் செய்தார். அவர்கள், உடனடியாக ஆக்ஷனில் இறங்கினர். பெண் போலீசார், காயலுடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்படுத்தினர். கிராபிக்ஸில் உருவாக்கிய பெண் ணின் புகைப்படங்களை அவருக்கு அனுப்பினர். அதில் மயங்கிய காயல், ’போனில் பேசுவோமே’ என்றான். சரி என்று பேசத் தொடங்கினர்.
இதையடுத்து ’நாம மீட் பண்ணலாமா?’ என்றான் காயல். சரி என்றார் அந்த பெண் போலீஸ். ’நான் தானேவில் இருக்கிறேன். மும்பையில் எங்கு மீட் பண்ணலாம்?’ என்று கேட்டான். தாதரில் உள்ள சுவாமிநாரயண் கோவிலில் சந்திக்கலாம் என்றார் பெண் போலீஸ். ஆசை, ஆசை யாய் வந்த காயலை, அங்கேயே நிற்க வைத்து பிறகு சுற்றி வளைத்திருக்கிறது போலீஸ்!
தானேவில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் காயல், எனக்கு அவரை தெரியும், இவரைத் தெரியும் என்கிற ரீதியில் விட்டிருக்கிறார் பீலா. ஆனால், போலீசார் ’அன்பாக’ அழைத்து அவன் போனை நோண்டியதில் இன்னும் சில இளம் பெண்களுக்கும் இதே போல பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது.
சிக்கிக்கொண்ட அவனிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.