மதுபோதையில் அத்துமீறிய மகனை வெட்டிக் கொன்ற தாய் கைது
குடிபோதையில் மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற நபரை, அவரது தாயே அரிவாளால் வெட்டிக்கொன்றுள்ளார்.
அண்மையில் குடிப்பழக்கத்தால் மருமகளை அடித்து துன்புறுத்திய மகனை தாயே கொலை செய்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது. இந்நிலையில் காரைக்குடி அருகே குடிபோதையில் அத்துமீறிய மகனை அவரது தாயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
காரைக்குடி அருகே சாக்கவயல் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்ற சுமைத்தூக்கும் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
வீராச்சாமியின் குடிப்பழக்கத்தால் அவரது மனைவி பத்தாண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வீராச்சாமியின் குழந்தைகளை அவரது பாட்டி மாரியம்மாள் பராமரித்து வந்தார். மூத்த மகள் திருமணம் செய்து சென்றுவிட்டநிலையில், பெற்ற தாயையும், மகளையும் போதையில் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் வீராச்சாமி. இந்நிலையில், வீராச்சாமி மதுபோதையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சி செய்ய, அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மாரியம்மாள், மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். வீராச்சாமியின் தாயை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.