சாப்பிடாமல் சென்ற கணவர்: 1 வயது குழந்தையை தூக்கிலிட்டு தாய் தற்கொலை..!
சென்னையில் குழந்தையை துக்கிலிட்டு கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கணபதி. வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா ரதி. வயது 23. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. தம்பதியினருக்கு கிருஷ்வா என்ற 1 வயது குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கணபதிக்கும் சுமித்ரா ரதிக்கும் வீட்டில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனைவி மீது கணபதி கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். இதனிடையே நேற்று காலை வழக்கம்போல தனது கணவருக்கு சுமித்ரா ரதி சாப்பாடு செய்திருக்கிறார். ஆனால் அதற்குமுந்தைய நாள் போட்ட சண்டையால் கோபத்தில் இருந்த கணபதி மனைவி செய்த சாப்பாட்டை சாப்பிடாமல் வேலைக்கு கிளம்பியிருக்கிறார்.
இதனால் வேதனையடைந்த மனைவி தனது 1 வயது குழந்தையை முதலில் தூக்குலிட்டு கொன்றுவிட்டு பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். பின்னர் வேலை முடிந்து கணபதி வீடு திரும்பிவந்து பார்த்தபோது, கதவு சாத்தப்பட்டிருக்கிறது. ஜன்னல் வழியாக கணபதி எட்டிப்பார்த்தபோது அங்கு மனைவியும் குழந்தையும் தூக்கில் தொங்கியிருக்கின்றனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்த கணபதி இருவரையும் மீட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். தற்போது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.