
தேனி மாவட்டம் கம்பம் கிராம சாவடி பகுதியைச் சேர்ந்த சௌந்தரவேல் - பாண்டீஸ்வரி தம்பதியரின் மகள் சினேகா. இவருக்கும் போடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், சினேகாவிற்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சினேகாவின் பெற்றோர் கேரளாவில் தோட்ட வேலைக்குச் சென்றதால், குழந்தையுடன் கம்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சினேகா வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி காலை தனது பாட்டி கடைக்குச் சென்ற நிலையில், சினேகா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு குளிப்பதற்காக சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை என்றும் குழந்தை கடத்தப்பட்டதாகவும் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தமபாளையம் டிஎஸ்பி மதுக்குமாரி மற்றும் கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா, சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினர் மற்றும் சினேகாவின் உறவினர்கள் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது சினேகாவின் வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த பால்கேன் ஒன்றில் குழந்தை மூழ்கியிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து குழந்தை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தை வீட்டில் இருந்த பால்கேனில் இறந்த நிலையில் கிடந்தது குறித்து சினேகாவின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், குழந்தையின் தயார் சினேகாவிடம் நடத்திய விசாரணையில், முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சினேகாவிடம் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது தனது குழந்தையை தானே தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் தனக்கு வலிப்பு நோய் உள்ளது எனவும் அதனால் குழந்தையை பராமரிக்க இயலவில்லை எனவும், குழந்தை தொடர்ந்து அழுததால் எரிச்சலடைந்து குழந்தையை கொலை செய்ததாகவும் சினேகா போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சினேகா, தேனி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சினோகவின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத போலீஸார் நடத்திய விசாரணையில் சினேகா, அப்பகுதியில் உள்ள சில ஆண்களுடன் நட்புறவு கொண்டு நெருங்கி பழகியுள்ளது உறுதியாகியுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.