திருச்சியை சேர்ந்த அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஏடிஎம் கார்டு மூலம் மேற்குவங்கத்தில் பணம் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள காச்சக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன்-செல்வி தம்பதியினர். முனியப்பன், மணப்பாறையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி செல்வி திருப்பூரில் தங்கி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தனது மனைவி செல்வியின் ஏடிஎம் கார்டை முனியப்பன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி செல்வியின் வங்கி கணக்கிற்கு அவரது சம்பளப் பணம் ரூ.14,570/- வரவு வைக்கப்பட்டதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் மறுநாள் காலையில் ரூ.14,500/- ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் வங்கியில் சென்று முறையிட்டுள்ளார்.
இது குறித்து கணக்கை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரி இரயில்வே சந்திப்பில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கவும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.