ஆன்லைனில் சீட்டு விளையாடி கடன்: காணாமல் போன காவலர் - மனைவி புகார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைனில் சீட்டு விளையாடி கடனானதால் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் தமிழக அரசின் 11-வது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. அங்கு காவலராகப் பணிபுரிபவர் சேரன் பாண்டியன் (26). இவர் அங்குள்ள காவலர் புதிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சேரன் பாண்டியன் ஆன்லைனில் சீட்டு விளையாடியதன் காரணமாக கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக மனைவியின் நகையை வாங்கி கடனை அடைத்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த காவலர் கடந்த 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலையத்தில், தனது கணவர் சேரன் பாண்டியனை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார்.இந்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.