அடித்து நொறுக்கப்பட்ட எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார்..!
தூத்துக்குடி தட்டார்மடத்தில் செல்வம் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிலையில் அவரது கார் மர்மநபரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். இவர் லாரித் தண்ணீர் விநியோகம் செய்பவர். சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த அதிமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் திருமணவேல் என்பவரிடம் ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தகராறு காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதி இவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கைத் தொடர்ந்து ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால், ஆய்வாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை முன்வைத்து, செல்வனின் உடலையும் அவர்கள் வாங்க மறுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக செல்வனின் உறவினர்களுடன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. செல்வன் கொலை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என செல்வனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செல்வனின் குடும்பத்தினரை சந்தித்து, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து, சொக்கன்குடியிருப்பு தேவாலயம் முன்பு நடைபெற்ற போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். இந்த சூழலில், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்கலாம்: வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்!