சிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது!
ஈரோடு அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை போஸ்கோ சட்டத்தில் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மகளை கட்டிட தொழிலாளியான ஆனந்தராஜ் என்பவர் கடத்தி சென்றதாக, சில தினங்களுக்கு முன்னர் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார்
அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உடனடி நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறி முருகேசன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிறுமியுடன், ஆனந்தராஜ் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற ஈரோடு காவல்துறையினர் ஆனந்தராஜையும், சிறுமியையும் ஈரோடு அழைத்து வந்தனர். பின்னர் ஆனந்தராஜை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவிய முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.