மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது!
செஞ்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் கொத்தனார் சங்கர்(35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். இதனிடையே அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் அவருடைய அண்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரிக்கும்போது கொத்தனார் சங்கர் அப்பகுதியில் பாலம் கட்டுமானப் பணிக்கு வரும் போது அடிக்கடி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் கொத்தனார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.