ஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
ஓடும் காரில், இளம் பெண் ஒருவரை, மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 24. திருமணம் ஆன இவர், மதுராவில் நடக்கும் விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்புவதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த பெண் ஒருவர், சுமதியை பார்த்திருக்கிறார். ’நாங்களும் ஊருக்குத்தான் போகிறோம், எங்க காரிலேயே வரலாமே’ என்று அழைத்திருக்கிறார். காரில் ஏற்கனவே 3 ஆண்கள் இருந்தனர். நம்பி ஏறினார் சுமதி. கார், ஆக்ரா வந்ததும் அங்கு டீ கொடுத்துள்ளனர். குடித்ததுமே மயங்கிவிட்டார்.
பின்னர் காரில் இருந்த 3 ஆண்களும் சுமதியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆக்ராவுக்கும் மதுராவுக்கும் இடையில் நடந்துள்ளது. பின்னர் காரில் இருந்து சுமதியை ரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
காலையில் ரோட்டோரத்தில் இளம் பெண் ஒருவர் காயத்துடன் கிடப்பதைக் கண்ட அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சுமதியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.