உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டியதாலா பெண் தற்கொலை - உண்மை என்ன !
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி , இளம்பெண் ஒருவருடனான தனது உறவை நியாயப்படுத்திய கணவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் சென்னை பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என நேற்று செய்தி வெளியானது. சில முன்னணி நாளிதழ்களிலும் இந்த செய்தி முதல் பக்கத்தில் வெளியானது. உச்சநீதிமன்றத்தின் மற்ற தீர்ப்புகள் எல்லாம் மக்களை சென்றடைய எத்தனையோ நாள் ஆகும் போது இந்த தீர்ப்பு மட்டும் எப்படி சென்றடைந்து, ஒரு பெண் இறந்து விட்டாள் பாருங்கள் என சமூக வலைத்தளம் கொந்தளித்தது.
நாளிதழ்களின் பிரசுரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க ஆரம்பித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி பேசும் அளவுக்கு ஜான் பால் இருந்திருக்க வாய்ப்புள்ளதா, புஷ்பலாதாவின் தற்கொலை கடிதம் சொல்வதென்ன என பல்வேறு கோணங்களின் இதனை களத்திற்கு சென்றே விசாரிக்க ஆரம்பித்தோம்.
முதலில் புஷ்பலதாவின் தற்கொலை கடிதத்தில் என்ன இருக்கிறது என கேட்டு தெரிந்து கொண்டோம் “ கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் சந்தோஷமாதான் இருந்தோம். ஆனா போன 6 மாசமா எங்களுக்குள்ள சண்டை ; பூங்காவுல வேலை பாக்குற அனிதா கூட இவருக்கு பழக்கம் இருக்கு ; என் புள்ளைய கூட காலையில வேலைக்கு போறப்போ தூக்கிகிட்டு போயி அனிதாகிட்ட விட்ராரு ; சாயங்காலம் கூட்டிட்டு வராரு ; நான் இல்லனா அவரு சந்தோஷமா இருப்பாரு” என எழுதப்பட்டுள்ளது. அதாவது புஷ்பலாதாவின் தற்கொலை கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் மிக தெளிவாக இருக்கிறது. உறவு விரிசலை தவிர வேறு எந்த காரணத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை ; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டிதான் கணவர் மற்றொரு பெண்ணோடு வைத்துள்ள உறவு நியாயப்படுத்தினார் என்றால், தற்கொலை கடிதத்தில் அந்த பகுதியே இல்லாதது ஏன்
சரி, சம்பவ இடத்துக்கு சென்று விசாரிப்பது இன்னும் சரியாக இருக்கும் என்ற முறையில் அக்கம் பக்கத்தினரிடம் பேசினோம். அருகமை வீட்டுக்கார பெண் கூறும் போது “ரெண்டு பேரும் லவ் மேரேஜ், பெத்தவங்க கூடலாம் பேசுறது இல்ல போல, நல்லாத இருந்தாங்க, கடைசி 6 மாசமாத்தான் பிரச்னை, அந்த சின்ன புள்ளய அந்த பையன் தூக்கிட்டு போயிடும், இவ ஒரே அழுகையா புலம்புவா, நான் செத்துப் போன இவரு நிம்மதியா அவ கூட இருப்பாருல அப்டினு சொல்லிக்கிட்டு இருப்பா” என கூறினார். ஜான்பாலுடன் இருந்து வந்த உறவு விரிசலில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் புஷ்பலதாவிடம் இருந்திருக்கிறது என அறிந்து கொள்ள முடிந்தது.
ஒருவேளை அங்கிருக்கும் யாரோ அல்லது கைதான ஜான்பாலோ இந்த விவகாரத்தில் விசாரணையின் போது ஏதாவது இது குறித்து கூறியிருக்கலாம் என்பதால் வழக்கை விசாரித்த ஆய்வாளரிடம் பேசினோம்; மிகுந்த கவலையோடு கேட்ட அவர் : எங்கள் விசாரணையில் இப்போது வரை அப்படி ஒரு தகவல் இல்லை, பெண்ணின் அப்பா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் ; உரிய விசாரணை முறைகள் முடிந்ததும் அந்த புகாரில் விசாரணை நடத்துவோம், அருகில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணை , கைப்பற்றிய தடயங்கள் , ஜான்பாலிடம் நடந்த முதற்கட்ட விசாரணை என அனைத்திலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கூறவில்லை”என்றார். ஜான்பால் பேப்பரை காட்டி மனைவியிடம் கூறினார்கள் எனவும் சொன்னார்களே என் கேட்ட போது “வீட்டில் இருந்த எந்த செய்தித்தாளும் கைப்பறவில்லை” எனவும் கூறினார்
ஆய்வாளரின் தகவல், புஷ்பலதா எழுதிய தற்கொலை கடிதம், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவல் என அனைத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், புஷ்பலதா தற்கொலைக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது. அதே நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும் , கணவன் மனைவி உறவு விரிசலில் நடந்த , பதிவான முதல் தற்கொலை என்பதால் தீர்ப்போடு ஒப்பிட்டு அதனை பிரபலப்படுத்த முயற்சித்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது. எந்தவித அடிப்படை தகவல்களும் இல்லாமல், சிலவற்றை மறைமுகமாக ஊக்குவிப்பதை தவிர்த்து, தன் பணி உணர்ந்து ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.