“100 நாள் வேலைக்கு செல்வோரின் வீட்டை குறிவைப்பேன்” - கொள்ளையனை அலேக்காக தூக்கிய போலீஸ்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையனை கைது செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அதிரடி காட்டியுள்ளனர். அவரிடமிருந்து 75 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி தண்டபாணி என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதாக மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, திருக்கோவிலூர் டிஎஸ்பி கங்காதரன் மேற்பார்வையில் ஆய்வாளர் பாபு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கூட்ரோட்டில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வடகரைதாயனூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் காமராஜ் என்பது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன்பு மேலந்தல் கிராமத்தில் நகைகள் திருடியது தெரியவந்தது. மேலும் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 100 நாள் வேலைக்கு செல்லும் வீடுகளை குறிவைத்து இவர் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. இவர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கிராம பகுதிகளில் அமைந்துள்ள 10 வீடுகளில் தனது கைவரிசையை காட்டி திருடி இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 75 சவரன் தங்க நகைகளையும், 250 கிராம் வெள்ளி நகைகளையும், 25 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், 2 கார்கள் மற்றும் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்துள்ளதால் இந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

