குடும்பத்தகராறில் மைத்துனரை குத்திக்கொன்றவர் கைது
ஓசூர் அருகே குடும்பத் தகராறில் மைத்துனரை கத்தியால் குத்திக் கொன்ற நபர் ஒரு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சளகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி-லட்சுமி தேவி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதனால் லட்சுமி தேவி கோபித்துக்கொண்டு அவரது தாயார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையறிந்த கணவர் மூர்த்தி, கோபித்துக்கொண்டு போன மனைவியை அழைத்துவர மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மனைவியின் சகோதரர் லட்சுமிபதியுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில், கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி அருகில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமிபதியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமிபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மூர்த்தி அங்கிருந்து தப்பிச்சென்றார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பிச்சென்ற மூர்த்தியை, கொலை நடந்த ஒரு மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.