\
Ramachandran|Accused
Ramachandran|Accused pt desk

"என்னையவே திட்றியா" - பழிக்கு பழியாக ஒரு பைக்கை எரிக்க நினைத்து தீக்கிரையான 16 பைக்குகள்!

மதுரவாயல் அருகே சாலையில் நிறுத்தி வைத்திருந்த 16 இருசக்கர வாகனங்கள் எரிந்த சம்பவத்தில் திடீர் திருப்பம். கைதான நபரால் பரபரப்பு.
Published on

சென்னை மதுரவாயல், விஜிபி அமுதம் நகர் பகுதியில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த ஓலை குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானதாக கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற கோயம்பேடு போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஓலை குடிசையின் மேலிருந்த ஓலையை எடுத்து ஒரு இருசக்கர வாகனத்தின் மீது தீ வைத்து விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (51), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதில், கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று குடி போதையில் படுத்திருந்த ராமச்சந்திரனின் செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அதே பகுதியில் இருந்தவர்களிடம் ராமச்சந்திரன் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அவதூறாக பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தன்னை திட்டிய அருள் என்பவரின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளார். அப்போது. எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஓலை குடிசை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கும் தீ பரவியதை அடுத்து அங்கிருந்து ராமச்சந்திரன் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமச்சந்திரனை கைது சேய்த கோயம்பேடு போலீசார், விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com