முதல் சந்திப்பிலேயே வைரமோதிரத்தோடு எஸ்கேப் ஆன காதலன்!
முதல் சந்திப்பிலேயே வைர மோதிரத்தோடு எஸ்கேப் ஆன காதலன் பற்றி இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மும்பை கர் பகுதியை சேர்ந்தவர் வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் ஆகவில்லை. திருமணத் தகவல் தொடர்பான இணைய தளத்தில் தனக்கான வருங்கால கணவரை தேடிக்கொண்டிருந்தார் வித்யா. அப்போது அவர் கண்ணில் சிக்கினார் அழகான, ஸ்டைலான இளைஞர். போட்டோவை பார்த்ததுமே வித்யாவுக்குப் பிடித்துவிட்டது. அவர் பெயர் ஆர்யன் படேல். தாதரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. பின்னர் இமெயிலில் அவரைத் தொடர்பு கொண்டார். போன் நம்பரை மாற்றிக்கொண்டனர். பின்னர் வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சரில் அடிக்கடி பேசி காதல் வளர்த்தனர். ’தூர தூர இருந்து பேசிட்டே இருக்கோமே. நேர்ல சந்திக்கலாம்’ என்றார் படேல். சரி என்று கர் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்க முடிவு செய்தனர். செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சந்தித்தனர். படேல், வித்யாவிடம் சிரிக்க சிரிக்கப் பேசினார். உச்சிக்குளிர்ந்து போனார் அவர். பின்னர் வித்யாவின் கையில் போட்டிருந்த வைர மோதிரத்தைப் பார்த்து, ’ஆஹா, என்ன அழகு’ என்றார். ’நல்லாருக்கா’ என்று கேட்ட அப்பாவி வித்யா, அதைக் கழற்றி, ’இந்தா பாருங்க’ என்று நீட்டினார். அதை படேல் கையில் வைத்துப் பார்த்துகொண்டிருந்த போது அவரது செல்போன் ஒலித்தது. ‘ஒரு நிமிஷம்’ என்று போனைத் தூக்கிக்கொண்டு வெளியே போன படேல் வைர மோதிரத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டார்.
காபி ஷாப்பில், காத்திருந்து காத்திருந்து கண்கள் வீங்கிப் போன வித்யா, படேல் போனுக்கு அடித்தால் சுவிட்சுடு ஆஃப் என தகவல் வந்தது. அதிர்ச்சியான வித்யா இதுபற்றி கர் போலீஸில் புகார் செய்ய, விசாரித்து வருகிறது போலீஸ்.