சத்தமாக ஒலிக்கவிட்ட பாடலால் நேர்ந்த விபரீதம்... மரணத்தில் முடிந்த வாய்ச்சண்டை
டெல்லியில் மஹேந்திரா பார்க் பகுதியில் சுஷில்(29 வயது) என்பவர் தனது சகோதரர்களான சுனில் மற்றும் அனில் என்பவர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு அருகில் அப்துல் சாட்டர் என்பவரும் வசித்துவருகிறார். பூண்டு வியாபாரியான சாட்டர்ஜிக்கு ஷானாவஸ், ஆஃபாக், சந்த் மற்றும் ஹசீன் என்ற 4 மகன்கள் இருக்கின்றனர்.
நேற்று (27.102020) சாட்டர்ஜி வீட்டில் அளவுக்கு அதிகமாக சத்தம் வைத்து பாடலை ஒலிக்கவிட்டிருக்கின்றனர். அருகிலிருப்பவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாகக் கூறிய சுஷில் மற்றும் சகோதர்களுக்கும், சாட்டர் குடும்பத்திற்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் அதிகமாகி அடிதடி வரை சென்றதால் மாலை 3.15 மணியளவில் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இந்த சண்டையில் பலத்த காயமடைந்த சுஷில், சுனில் மற்றும் அனில் மூவரையும் போலீஸார் பாபு ஜக்ஜிவான் ராம் நினைவு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷில் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சாட்டர் குடும்பத்தாரிடம் விசாரித்ததில், சண்டையில் சாட்டரின் மனைவி ஷாஜகானுக்கு அடிப்பட்டது தெரியவந்துள்ளது. அவரும் பிஜிஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பலத்த காயமடைந்த சுனில் மற்றும் அனில் ஆகிய இருவரும் மேற்சிகிச்சைக்காக சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சுனிலின் அறிக்கையை வைத்து, சாட்டர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சான்வாஸ், ஆஃபாக் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இறந்த சுஷில் ஏற்கெனவே மதுவை பதுக்கிவைத்தல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

