மனைவியை கேலி செய்த நண்பர் கொலை: உடலை சாலையில் வீசிய தம்பதி
சென்னையை அடுத்த மதுரவாயலில் மதுபோதையில் மனைவியை கேலி செய்த நண்பரை, கணவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி வானகரம்-அம்பத்தூர் செல்லும் சாலையில், பாலம் ஒன்றின் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மதுரவாயலை சேர்ந்த குணசீலன் என்பது தெரியவந்தது. கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
கொல்லப்பட்ட குணசீலன் அயப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தான் கடைசியாக பங்கேற்றிருக்கிறார். பின்னர் நண்பர் செந்தில் மற்றும் அவரது மனைவி கலைவாணியுடன் அவர்களது வீட்டுக்குச் சென்ற குணசீலன், மதுபோதையில் செந்திலின் மனைவியை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த செந்தில், குணசீலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த குணசீலனை மீண்டும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் குணசீலனின் உடலை அயப்பாக்கம் செல்லும் ஏரியில் செந்திலும், அவரது மனைவி கலைவாணியும் வீச திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் குணசீலனின் உடல் சற்று பெரியதாக இருந்ததால் உடலை கோணிப்பைக்குள் திணிக்க முடியவில்லை. இதனால் குணசீலனின் உடலை அப்படியே சாலையோரம் தம்பதிகள் வீசிச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் இந்த திடுக் தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாகிவிட்ட செந்தில் மற்றும் அவரது மனைவி கலைவாணியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.