
ஹரியானாவில் மருத்துவமனையின் அலட்சியத்தால் படுக்கையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கபட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் ராம் பால் (55). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இவரது மகன் சுகேந்திரா குமார் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இவர் உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் ராம்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராம்பாலின் மகன் சகேந்திரா குமார் கூறியதாவது, அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் கழித்து வந்த மருத்துவர்கள், உடல்நிலை மோசமாக உள்ளதால் ஐசியுவிக்கு மாற்றிவிட்டதாக தெரிவித்தனர். ஐசியுவில் உள்ள தனது தந்தையை காண சென்றபோது தலையில் அடிப்பட்டு இருந்த நிலையில் படுக்கையில் இருந்தார், அவர் அணிந்திருந்த ஆடைகளில் ரத்தம் வழிந்திருந்தது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில், சிகிச்சையின் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது மருத்துவமனை படுக்கையில் இருந்த இரும்பு கம்பியில் மோதி அவருக்கு அடிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராம்பால் குடும்பத்தினர் கூறுகையில், மருத்துவமனை உள்ளே என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது. அவரை ஸ்ட்ரெச்சரில் இருந்து படுக்கைக்கு மாற்றும்போது கீழே விழுந்து அடிப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.