தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்றதால் தகராறு - தடுக்கமுயன்றவர் கொலையான பரிதாபம்
கரூர் அருகே தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்துச்சென்றதால் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்றவரை அடித்துக் கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே உள்ள நஞ்சை காளிக்குறிச்சியை சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (19) கூலி வேலை செய்துவருகிறார். இவரது தங்கையும் ராஜபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில் நஞ்சை காளிக்குறிச்சியில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு ராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டனின் தங்கையின்தோழி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். திருவிழா முடிந்ததும் அந்த பெண்ணை மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த மதன் (26), அபிஷேக் (19), தமிழரசன் (19) ஆகிய மூவரும் மணிகண்டனை எங்கள் ஊர் பெண்ணை எப்படி கூட்டிக்கொண்டு வரலாம் என வம்புக்கு இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மணிகண்டன் தனது நண்பன் சூர்யாவிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து சூர்யா தனது செல்போனில் ராஜபுரத்தைச் சேர்ந்த நபர்களிடம் பேசியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்ன தாராபுரத்துக்கு வந்து பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்த சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். அடிதாங்க முடியாமல் சூர்யா துடித்துள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் இதனைத் தடுத்துள்ளார். அரவிந்த் முதுகலை இன்ஜினியரிங் படித்துள்ளார். இந்த சமயத்தில் சூர்யா ஓடி ஒளிந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய 3 பேரும் அரவிந்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயமடைந்த அரவிந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அதேபோல் சிகிச்சைக்காக சூர்யாவையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சின்ன தாராபுரம் காவல்நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் மதன், அபிஷேக், தமிழரசன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்ன தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.