பெரியார் வேடமணிந்த குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெரியார் வேடமணிந்த குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெரியார் வேடமணிந்த குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பெரியார் வேடமணிந்து குழந்தையொன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியில், பெரியாரின் கருத்துகளை அக்குழந்தை பகிர்ந்திருந்தார். அக்குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பெரியார் போல் வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக்கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அப்படி செய்தால்தான், மற்ற குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பயம் வரும் என்றும் வெங்கடேஷ்குமார் பாபு பதிவிட்டிருந்தார் அந்நபர்.

இப்படி பீதியையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வெங்கடேஷ்குமார் பாபு மீது கயத்தாறு காவல்துறையினர் குற்ற எண் 100/22 U/S 153 (அ), 505 (1), 506 (1) IPC - Sec 67 IT Act உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், சாதி, மதம், இனம் தொடர்பான உணர்சிகளை தூண்டிவிடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அச்சம் ஏற்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்குக் கூட கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் அக்குழந்தைகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து நேரில் அவர்களை சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் திருவள்ளுவரின் உருவச்சிலையையும் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்திருந்தார். அம்மாணவர்களுக்கான தனது பதிவில், “தலைமுறைகள் கடந்து மானுடச் சமுதாயம் பகுத்தறிவோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கான வழிகாட்டி! கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன். இது பெரியார் மண்! கலைக்கு இடமுண்டு; களைகளுக்கு அல்ல” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com