ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை எரித்துக் கொன்றவர் கைது

ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை எரித்துக் கொன்றவர் கைது

ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை எரித்துக் கொன்றவர் கைது
Published on

சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக் காதல் காரணமாக இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திட்டமிட்டே இந்த கொலை நடந்ததுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ வைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்துஜா. இவரது பள்ளிக் கால நண்பர் ஆகாஷ். இந்துஜா மீது ஒருதலைக் காதல் கொண்ட ஆகாஷ், அவரையும் காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஆகாஷின் தொல்லை அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. ஆனால் இந்துஜா ஆகாஷின் காதலை ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் உள்ள இந்துஜாவின் வீட்டுக்கு வந்த ஆகாஷ், அந்தப் பெண் மீதும் அவரது தாயார் மற்றும் சகோதரி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இது திட்டமிடப்பட்டு செய்த கொலை என காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் கூறும்போது, “நேற்று இரவு 9 மணி போல் 5 லிட்டர் கேன் கொண்டு ஒருவர் அந்த வீட்டிற்கு சென்றார். திடீரென அலறல் சத்தம் கேட்டதால் ஓடிச் சென்று பார்த்தோம். அந்த நபர், இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிக் கொண்டிருந்தார். இந்துஜாவின் தாயார் அவரை வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த நபர் கையில் இருந்த கேனில் உள்ள பெட்ரோலை அந்த வீடு முழுவதும் ஊற்றினார். உடனே அவரை வெளியே தள்ளினோம். அந்த சமயம் பார்த்து கையிலிருந்த லைட்டர் மூலம் நெருப்பை பற்ற வைத்துவிட்டு ஓடிவிட்டார். இதனால் மூவரும் தீப்பற்றி எரிந்தனர். எனக்கும் காயம் ஏற்பட்டது. முதலில் நான் என்னை காப்பாற்றிக் கொள்ள பார்த்தேன். வந்தவர் யார் என்றெல்லாம் தெரியாது. என்ன காரணத்திற்காக கொளுத்தினார் என்பதும் தெரியாது. ஆனால் திட்டமிட்டு தான் இதனை செய்ததாக தெரிகிறது. உடனே தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்தது. இது வேதனையான விஷயம். சிட்டியிலேயே இவ்வாறு தாமதமாக வந்தால் கிராமத்தில் சேவை எப்படி இருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள். கால தாமதத்திற்கு பின்பும் ஒரு ஆம்புலன்ஸ் தான் வந்தது. 5 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு ஆம்புலன்ஸ் எப்படி போதும். ஆம்புலன்சில் செல்லும்போது இந்துஜாவிற்கு இதயத்துடிப்பு குறைந்துவிட்டதாக கூறினார்கள்” என்றார். இதனிடையே பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com