மருமகளை கொலை செய்து கிணற்றில் ஒளிந்த மாமனார் கைது
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மருமகளை கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். இவரது மனைவி அம்பிகா. தம்பதியருக்கு ஜோதிமணி, சங்கர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் வீட்டின் அருகில் அம்பிகாவின் மாமனார் பெரியசாமியும், மாமியார் முத்தாயியும் குடியிருந்து வந்துள்ளனர்.
பெரியசாமி தனது மருமகள் அம்பிகாவிடம், ஏற்கனவே 4 முறை தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததுள்ளார். இதனையடுத்து அம்பிகா தனது பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவிக்க, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஊர் பெரியவர்கள் விசாரித்து எச்சரித்துள்ளனர். ஆனால் பெரியசாமி தொடர்ந்து தனது மருமகள் அம்பிகாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதியன்று மாலை அம்பிகா தனியாக இருப்பதை அறிந்த அவரது மாமனார் பெரியசாமி மருமகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அம்பிகா மறுப்பு தெரிவிக்க, பெரிய இரும்பு கம்பியால் தலையில் அடித்தும் கழுத்தில் குத்தியும் கொலை செய்துவிட்டு வீட்டின் அருகில் இருக்கும் வனவாசி மலைப்பகுதியில் தலைமறைவாகிவிட்டார் பெரியசாமி.
இது தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பெரியசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் ரெட்டியூரில் உள்ள கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் பெரியசாமி ஒளிந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கருமலைக்கூடல் போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். ஆனால் பெரியசாமி கிணற்றில் இருந்து மேலே வர மறுத்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலமாக பெரியசாமியை போலீசார் மீட்டு கைது செய்துள்ளனர்.