நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயற்சி: ஒருவர் கைது!
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் இரண்டாவது முறையாக விற்பனை செய்ய முயன்ற நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், வாணி -ராணி, உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை வாணிஸ்ரீ. இவர் நடத்தி வந்த நிறுவனத்திற்காக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ஒரு மூன்றரை கிரவுண்ட் நிலத்தை வாங்கியிருந்தார். இந்த நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டிருப்பதாக வாணிஸ்ரீ கடந்த 2012ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் அதே நிலம் மீண்டும் மோசடியாக விற்பனை செய்யப்பட்டதை அறித்து வாணிஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரை விசாரித்த காவல்துறையினர், ஏற்கனவே மோசடி புகாரில் கைதான 4 பேரில் ஒருவரே நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட தமீம் அன்சாரி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.