2 மாதமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அரைகுறை ஆடை கொள்ளை கும்பல்: ஒருவர் கைது
கோவையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, அரைகுறை ஆடையுடன் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர் ஆகிய பகுதிகளில் முகமூடி அணிந்து அரைகுறை ஆடையுடன், ஆயுதங்கள் ஏந்தி தொடர்ந்து கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் முதலில் பிடிபட்ட இந்த கொள்ளையர்கள், பிறகு பீளமேடு, இருகூர், பூங்கா நகர் என அடுத்தடுத்து தொடர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதற்காக மாநகர குற்றபிரிவு துணை ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிங்காநல்லூர் பகுதியில் A.g புதூர், கோத்தாரி நகர், கதிரவன் கார்டன், சுருதி என்கிளேவ் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
அதில், ஒரு வீட்டில் பதிவான சிசிடிவி காட்சியில் கொள்ளையர்கள் வீட்டின் சுவர் மீது ஏறி கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதும், அதில் ஒரு கொள்ளையரின் முகம் சிசிடிவி கேமரா கழட்ட முயற்சிக்கும் போது தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், விசாரணையை முடக்கிய காவல்துறையினர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த வீரமணி என்பவரை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் வைத்து கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே 4 கொள்ளை வழக்குகள் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளை கூட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் அந்த கும்பல் பிடிபடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.