மதுரை | பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை - 3 பேரிடம் போலீசார் விசாரணை
செய்தியாளர்: மதுரை மணிகண்டபிரபு.
மதுரை ஆரப்பாளையம் சகாய மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அஜய் பிரசன்னா (24) இவர் மீது காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு, கொலை என சுமார் 12 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை இவர், தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அஜய் பிரசன்னா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், நேற்று நள்ளிரவில் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழக்கடைசுந்தர் என்பவரது வீட்டில், அஜய் பிரசன்னா மற்றும் சிலர் குடிபோதையில் அவரது வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பழக்கடைத சுந்தர் (38) தனது சகோதரர் தொத்தா சுந்தர் (36) மற்றும் பாண்டியராஜன் (26) உள்ளிட்டோர் அஜய் பிரசன்னாவை கொலை செய்ததாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.