கிரிப்டோகரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி-சதுரங்கவேட்டை பாணியில் ஏமாந்த மதுரை பெண்

கிரிப்டோகரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி-சதுரங்கவேட்டை பாணியில் ஏமாந்த மதுரை பெண்
கிரிப்டோகரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி-சதுரங்கவேட்டை பாணியில் ஏமாந்த மதுரை பெண்

சதுரங்கவேட்டை பாணியில் கிரிப்டோகரன்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்.

மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பாண்டிக்கருப்பன் என்ற ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியின் மனைவியான கோமதி என்பவர் சேலை விற்பனை சுயதொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற குடும்ப நண்பர் கோமதியிடம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியதோடு கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரெஜினாகுமாரி ஆகிய இருவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் கோமதி மற்றும் அவரது கணவரிடம் பேசி பிட்காயினில் 8000 ரூபாய் முதலீடு செய்வதோடு, பல்வேறு முதலீடு செய்யும் நபர்களை உறுப்பினர்களாக இணைத்துவிட்டால் சில மாதங்களில் பல லட்சம் லாபம் ஈட்டுவதோடு பி.எம்.டபிள்யூ கார் போன்ற ஆடம்பர கார்கள் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனையடுத்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிரபல தங்கும்விடுதியில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் தலைவர் கந்தசாமி என்பவர் வருவதாகக்கூறி கோமதியையும் கோமதி சேர்த்துவிட்ட உறுப்பினர்களையும் அழைத்து வரக்கூறி, அங்கு நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் 200பேர் கலந்துகொண்ட நிலையில், உறுப்பினர்கள் தலா 4,000ரூபாயை செலுத்திவிட்டு ஐடியை வாங்கிகொள்ளுமாறு கூறியுள்ளனர். மேலும் கோமதியை தனியாக சந்தித்து நீங்கள் முதல் உறுப்பினராக இணைந்துள்ளதால் 5லட்சம் ரூபாய் செலுத்தி, உடனடியாக அதற்குரிய கிரிப்டோகரன்சியை பெற்றுகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து கோவிந்தசாமி, ஆறுமுகம், ரெஜினா குமாரி ஆகிய மூவரும் தங்கியிருந்த விடுதிக்கு நேரில் சென்ற கோமதி மற்றும் அவரது கணவர் பாண்டிக்கருப்பன் ஆகிய இருவரும் 3.75லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளனர். அப்போது கிரிப்டோகரன்சி காயினை தருமாறு கேட்ட நிலையில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தலைவர் கந்தசாமியிடம்தான் உள்ளது எனவும், இரண்டே நாளில் வீடுதேடி வந்து காயினை தருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் சில நாட்கள் ஆகியும் காயின் தராத நிலையில் தனது பணத்தையாவது திரும்ப தருமாறு கோமதி கேட்டநிலையில், பணம் தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதோடு இதுபோன்று பல்வேறு பகுதிகளில் தாங்கள் ஏமாற்றிவருவதாகவும் கூறி மிட்டியுள்ளனர். இதனையடுத்து கிரிப்டோகரன்சி என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணமோசடியில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக்கூறி் பாதிக்கப்பட்ட கோமதி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் எந்த விசாரணையும் தொடங்காத நிலையில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிரிப்டோகரனசி நிறுவனத்தின் தலைவர் என்று கூறப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கிரிப்டோகரன்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவருடன் வந்த சில பெண்கள் ஆறுமுகத்தை மடக்கி பணத்தை கேட்க முயன்றபோது திடீரென செய்தியாளர் சந்திப்பை வேகமாக முடித்து அங்கிருந்து காவல்துறையினரின் முன்பாகவே அவசர அசரமாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச்சென்று அங்குள்ள ஆடம்பர தங்கும் விடுதிகளில் தங்கவைத்து சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றி மோசடி செய்த கும்பல், காவல்துறை முன்பாகவே தப்பியோடிய நிலையில் தாங்கள் சேர்த்துவைத்த பணத்தையும் இழந்ததோடு, உறுப்பினர்களிடமிருந்து வாங்கிக்கொடுத்த பணத்திற்கும் பதில் சொல்லமுடியாமல் கோமதி அதே இடத்தில் பரிதாபமாக நின்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com