மதுரை: அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களோடு சுற்றித்திரிந்த இருவர் கைது
மதுரையில் ஆயுதங்களோடு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களோடு சுற்றித்திரியும் நபர்கள் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்லூர் 50 அடி சாலையை ஒட்டியுள்ள பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவலின் பேரில், செல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அரிவாள் மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் சென்ற செல்லூர் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, அஜித் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.