மதுரை: காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் வழிப்பறி.. விசாரணையில் அம்பலமான 2 பகீர் உண்மைகள்!

மேலூர் அருகே காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில், கார் ஆக்டிங் டிரைவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
accuest
accuestpt desk

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். ஜவுளி வியாபாரியான இவர், நேற்று முன்தினம் தனது மனைவி யூசுப் சுலைஹா மற்றும் ஆக்டிங் கார் டிரைவர் அபுபக்கர் சித்திக் ஆகிய மூவரும் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் காரில் திருச்சி நோக்கி சென்றுள்ளனர். அப்போது திருச்சுனை பிரிவு நான்கு வழிச்சாலையில் காவலர் போல நின்றிருந்த இருவர், காரை மறித்துள்ளனர்.

இதையடுத்து காவலர்கள் என நிளைத்த வாகன ஓட்டுனர் சித்திக் வண்டியை ஓரங்கட்டியுள்ளார். அப்போது வாகனத்தை சோதனை செய்த காவலர் தோற்றத்தில் இருந்த இருவர், காரில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தையும் சேக் தாவூத் செல்போனையும் பறித்துக் கொண்டு ஆவணத்தை காட்டிவிட்டு கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து சேக் தாவூத் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கு அவர் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கினர். மேலும், சம்பவ இடத்தின் அருகே உள்ள பேக்கரி கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆக்டிங் டிரைவர் அபூபக்கர் சித்திக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. 50 லட்சம் பணத்துடன் திருச்சி நோக்கி காரில் செல்லும் விவரத்தை அவரது கூட்டாளிகளான மதுரை மாநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் நாகராஜ கோகுல பாண்டியன் மற்றும் பார்த்தசாரதி, அசன்முகமது, சதாம் உசேன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வாகனத்தில் கொண்டு செல்லும் பணத்தை வழிப்பறி செய்வது திட்டமாக இருந்தது.

இதில், காவலரான நாகராஜ கோகுல பாண்டியன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரும் காக்கி பேண்ட் அணிந்து மேலே ஜெர்கின் அணிந்தவாறு போலீஸ் போல வாகன தணிக்கையில் ஈடுபட்டு நடித்து பணத்தை எடுத்துச் சென்று மதுரையில் பதுங்கியுள்ளனர். கார் ஓட்டுநர் சித்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரங்கள் தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்கள் வழிப்பறி செய்த பணத்தில் 49 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம், செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம், ஒரு கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். .

இந்நிலையில், பறிபோன 50 லட்சம் பணம் ஹவாலா பணமாக கை மாறியதும் தெரியவந்தது இதையடுத்து அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித் துறைக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com