மதுரை: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மினி பஸ் ஓட்டுனர் போக்சோவில் கைது
மதுரையில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய பேருந்து ஓட்டுனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (40) என்பவருக்கு திருமணமான நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
மினி பஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவரது பேருந்தில் அடிக்கடி பள்ளிக்கு பயணம் செய்த 12ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியானதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவத்தை தனது தாயிடம் அந்த மாணவி கூறியதையடுத்து தங்கபாண்டியன் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார்.
இதனையடுத்து புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கில் ஓட்டுனர் தங்கபாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.