மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கம் - மர்மநபருக்கு வலை வீச்சு
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பெயரில் போலியான ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி பொதுமக்களிடம் பேசிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த ஓராண்டுக்கு முன்பு மதுரை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் பொது மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் பக்கத்தில் மதுரை சிட்டி போலீஸ் என்ற பெயரில் ஒரு பக்கத்தைத் தொடங்கினார். இந்த பிரத்யேகமான ஃபேஸ்புக் பக்கமானது காவல்துறை பொதுமக்களுக்கு செய்யும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், மக்களின் குறைகளை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பெயரில் போலியான ஒரு ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு, அதில் மர்ம நபர் ஒருவர் பேசி வருவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தப்பக்கத்தை தொடங்கியது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் தற்போது அந்த பக்கம் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “என்னை போன்று மர்ம நபர் சிலர் போலியான கணக்கில் பேசி வருகிறார்கள். அதனை யாரும் நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்,