மதுரை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - மேலூரில் உறவினர்கள் சாலைமறியல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மதுரை மேலூரை சேர்ந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மேலூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை, தும்பம்பட்டி சேர்ந்த 17வயது சிறுமி கடந்த 14 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறி சிறுமியின் தாயார் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிறுமியின் விவரம் வெளியில் தெரியவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என கூறி புகாருக்கான மனு ரசிதை பெற்றுசென்றுள்ளார். இதனையடுத்து மேலூர் காவல்துறையினர் 21ஆம் தேதியன்று சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது காணாமல் போன அந்த சிறுமி, தான் வசித்த பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவரை காதலித்ததாகவும், அவருடன் அச்சிறுமி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்திகொண்டிருந்தபோது, மார்ச் 3ஆம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் சிறுமியை மயக்க நிலையில் அழைத்துவந்து அவருடைய தாயார் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து சிறுமியை மேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவரின் ஆலோசனை பேரில் அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மயக்க நிலையில் இருந்ததால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கு சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை அழைத்துசென்று தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நாகூர் ஹனிபா அந்த சிறுமியை காதலித்து வந்ததாகவும், கடந்த 14ஆம் தேதி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு தனது நண்பர்களின் உதவியால் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராஹிம் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார் .
பின்னர், நாகூர் ஹனிபாவின் தாயார் அந்தப் பெண்ணை நீ தான் அழைத்து சென்றுள்ளதாக ஊரில் பேசுவதாகவும் இதனால் பிரச்சினை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாகூர் ஹனிபா மற்றும் சிறுமி இருவரும் எலி பேஸ்ட் வாங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நாகூர் ஹனிபா எலி மருந்தை வெளியில் துப்பியுள்ளார் ஆனால் அந்த சிறுமி சிறிதளவு எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் .
பின்னர் அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை மருத்துவர்களிடம் கூறாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். அப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு கையில் டிரிப் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நாகூர் ஹனிபா அந்தச் சிறுமியை தனது ஊருக்கு அழைத்துவந்து, தாயார் மதினாவிடம் மார்ச் 2 ஆம் தேதி ஒப்படைத்து, இரவு சிறுமியின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
மேலும் மருத்துவ அதிகாரிகளின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க படவில்லை என்றும், சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர்கள் மதுரையை சேர்ந்த பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், தாய் மதினா , தந்தை சாகுல் ஹமீது , சகோதரர் ராஜாமுகமது மற்றும் நாகூர் ஹனிபா உறவினர் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை போக்சா , கடத்தல் , கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் உள்ள 10 குற்றவாளிகளில் 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடிவருகின்றனர்.
போக்சோ சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ பெயரோ எந்த ஊடகத்திலும் பதிவு செய்யக்கூடாது மற்றும் சமூக வலைத் தளங்களிலோ பகிரவும், பதிவேற்றம் செய்யவும் கூடாது எனவும் சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
சிறுமி கடத்தல் விவகாரத்தில் சிறுமியின் கையில் இருந்து ஊசி போடப்பட்ட இடத்தை சுட்டிகாட்டி போதை மயக்க ஊசி செலுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறி சமூகவலைதளங்களில் தகவல் பரப்பபட்டு வந்த நிலையில், சிறுமி எலி பேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் சிறுமிக்கு சிகிச்சையின் போது கையில் குளுகோஸ் செலுத்துவதற்காக ஊசி செலுத்தப்பட்டதற்கான அடையாளம் கையில் இருந்த்தாகவும், சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தபடவில்லை என மருத்துவ அறிக்கை கூறியுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.