மதுரை மாவட்டத்தில் ஒரேநாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - 14 பேர் கைது
மதுரையில் ஒரேநாளில் 7 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மணமகன் உட்பட 14 பேரை கைது செய்தனர். இதையடுத்து 7 சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து நேற்று ஒரேநாளில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி, மேலூர், பேரையூர், சிந்தாமணி, சிலைமான் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற 7 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக, குழந்தை திருமணங்களை நடத்த முயன்ற மணமகன்கள், சிறுமிகளின் தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட 14பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். குழந்தை திருமணம் தொடர்பான புகாரில் மீட்கப்பட்ட 7 சிறுமிகள் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் குழந்தை திருமண முயற்சிகளில் ஈடுபட்டாலே அந்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதேபோன்று குழந்தை திருமணங்களுக்கு அனுமதி அளிக்கும் திருமண மண்டபங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

