மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு நீதிமன்ற விடுதலை- என்ன காரணம்?

மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு நீதிமன்ற விடுதலை- என்ன காரணம்?
மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு நீதிமன்ற விடுதலை- என்ன காரணம்?

`பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கேவலமாக எண்ணுவதை சமூகம் இன்னும் திருத்திக் கொள்ளாதது துரதிஷ்டவசமானது’ என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - சத்யா தம்பதியருக்கு, லத்திகா என்ற ஐந்து வயது பெண் குழந்தையும், ஹாசினி என்ற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால் தன்னை துரதிஷ்டசாலி என சமூகம் இகழ்ந்ததாக கூறும் சத்யா, முதல் குழந்தையான லத்திகாவை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததுடன், தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் தாய் சத்யா காப்பாற்றப்பட்ட போதும் இரு குழந்தைகளும் இறந்துவிட்டன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம், சத்யாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சத்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை கேவலமாக எண்ணும் போக்கில் இருந்து சமூகம் இன்னும் தன்னை திருத்திக் கொள்ளாதது துரதிஷ்டவசமானது” என வேதனை தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, நான்காவதாக பெண் குழந்தை பெற்றுக் கொண்ட சத்யா, நீதிமன்ற உத்தரவின் படி தற்போதுள்ள தனது இரு பெண் குழந்தைகளுடன் நேரில் ஆஜரானார். நடந்த சம்பவத்துக்காக நீதிமன்ற அறையிலேயே கதறி அழுத அவர், ஆண் குழந்தைகளைப் போல பெண் குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான் என்பதை தற்போது உணர்ந்து கொண்டதாகவும், இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து வளர்ப்பதாக உத்தரவாதம் அளித்தார்.

அவரது உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, சத்யாவுக்கு தற்போது தண்டனை வழங்குவதை விட அவரை விடுதலை செய்வதுதான் சரியாக இருக்கும் எனக் கூறி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

குறைந்தபட்சம் பட்டப்படிப்பு வரையாவது இரு குழந்தைகளையும் படிக்க வைப்பதாக சத்யா உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குழந்தைகளை படிக்க வைத்து வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com