பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் கைது! குற்றமிழைத்தவர் BJP பிரதிநிதியா? பாஜக விளக்கம்!

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின கூலி தொழிலாளி ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார் ஒருவர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பாஜக பிரமுகர் என சொல்லப்பட்ட நிலையில், பாஜக தரப்பு அதை மறுத்துள்ளது.
Urinate Issue - Madhya Pradesh
Urinate Issue - Madhya PradeshTwitter

என்னதான் காலமாற்றம், கல்வியறிவு மாற்றம் என பல மாற்றங்கள் சமூகத்தில் ஏற்பட்டாலும், ஒடுக்கப்பட்டவர்களின் மீது நடத்தப்படும் வன்கொடுமை சம்பவங்களானது தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகிறது. அதற்கு ஒரு மோசமான சாட்சியாக சமீபத்தில் மத்தியபிரதேசத்தில் நடந்த சம்பவம் அமைந்துள்ளது.

பார்ப்போருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அச்சம்பவத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் கரவுண்டியைச் சேர்ந்த 36 வயதான பழங்குடியின கூலித்தொழிலாளி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த கொடூர சம்பவத்தின்படி, அவர்மீது ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

சம்பந்தப்பட்ட அந்த வீடியோ:

6 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணொளியில் சிறுநீர் கழிக்கும் நபர் பிரவேஷ் சுக்லா எனவும், அவர் அப்பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்றும் கூறப்படுகிறது.

‘இந்திய தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்!’- மத்திய பிரதேச முதல்வர்

இந்த கொடூரமான சம்பவம் நடந்த வீடியோவானது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்து அவர் நேற்று ட்விட்டரில் பதிவிட்டார்.

அதில், “சித்தி மாவட்டத்தின் ஒரு வைரல் வீடியோ எனது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் உள்ள குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டார்.

‘சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவுடன் எந்த தொடர்பும் இல்லை’ - பாஜக!

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்படும் பிரவேஷ் சுக்லா, பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவுடன், குற்றச்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை பிரவேஷ் சுக்லாவே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படம்:

Kedar Nath Shukla
Kedar Nath ShuklaTwitter

இந்நிலையில் பிரவேஷ் சுக்லாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் அகர்வால் கூறுகையில், “பிரவேஷ் சுக்லாவுக்கும், பா.ஜ.க-விற்கும் எந்த தொடர்பும் இல்லை. பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு கொடூரமான செயலையும், கட்சி எப்போதும் எதிர்க்கும். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டார்.

பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லா குற்றஞ்சாட்டப்பட்ட பிரவேஷை தொகுதியை சேர்ந்தவராக தெரியும் என ஒப்புக்கொண்டாலும், அவருக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார். இதுகுறித்து பிரவேஷ் சுக்லா பேசுகையில், “சித்தி நகரில் இதுபோன்ற போஸ்டர்கள் இல்லை. சமூக வலைதளங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என் பெயரை தவறாக பயன்படுத்தியற்காக அவர் மீது புகார் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மூன்று பிரதிநிதிகள் இருப்பதாகவும், பிரவேஷ் அவர்களில் ஒருவர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகாலை 2 மணியளவில் கைது! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் 6 நாட்களுக்கு முன்னதாக நடந்தது என்றும், இந்த வீடியோ 6 நட்கள் பழைய வீடியோ என்றும் கூறப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் காவல்துறையினர் கவனத்திற்கு இது வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தி போலீசார், பிரவேஷ் சுக்லாவுக்கு எதிராக ஐபிசி பிரிவு 294 மற்றும் 504, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய கைது குறித்து தெரிவித்திருக்கும் காவல்துறை, “பிரவேஷ் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் மாறிக்கொண்டே இருந்தார். இருப்பினும் அவரை கைது செய்துள்ளோம். அதிகாலை 2 மணியளவில் அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com