காஞ்சிபுரம்: ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்
மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாக தெரிய வருகிறது. இதையடுத்து ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போதுபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை கத்தி, வீச்சுஅரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக மாடம்பாக்கம் ஊராட்சியில் பதற்றமான சூழல் நிலவுவதால் 40க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.