தனிமையில் பழகி இளம்பெண்ணிடம் மோசடி: பேஸ்புக் நண்பனுக்கு போலீஸ் வலை!
பேஸ்புக்கில் பழகி பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் பற்றி ஏராளமான செய்தி வந்தாலும் இன்னும் பலர் இந்த போலி நட்பில் சிக்கி, சின்னாபின்னமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இந்தச் சம்பவம்.
பெங்களூரைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரை பிரிந்து தனியாக வசித்த இவருக்கு பேஸ்புக்கில் அறிமுகமானார், அழகான சங்கர். சிக்மகளூரைச் சேர்ந்தவர். பேஸ்புக் சாட்டில் பழகிய இவர்கள் பிறகு காதலில் விழுந்தனர். சங்கர், தானும் டைவர்ஸ் செய்துவிட்டு தனியாக வசிப்பதாகக் கூறியிருக்கிறார். போதாதா? எனக்கு நீ ஆறுதல், நான் உனக்கு ஆறுதல் என்று அன்பில் திளைத்துள்ளனர்.
பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்தனர். சிக்மகளூரில் உள்ள பெரிய பங்களாவில் வசித்து வந்த சங்கர், இது தன் சொந்த பங்களா என்று கவிதாவிடம் கூறியிருக்கிறார். பெரிய பணக்காரர் போலிருக்கிறது என நினைத்த கவிதா, அவருடன் இன்னும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். சங்கரும் ’நாம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று கூறிவந்தார். ஒரு கட்டத்தில் கவிதா நச்சரிக்க ஆரம்பித்ததும், விலக ஆரம்பித்தார் சங்கர். பிறகுதான் கவிதாவுக்கு சங்கரின் சுயரூபம் தெரிய வந்திருக்கிறது, அவருக்கு தன்னைப் போலவே பல பெண்களுடன் தொடர்பு இருப்பது.
இதற்கிடையே கவிதா அவருடன் நெருக்கமாக இருந்தபோது திருட்டுத்தனமாக புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்துள்ளார் சங்கர்.
‘கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்தறியே?’ என்று கேட்டுள்ளார் கவிதா. சிறிது நேரத்தில் அவர் வாட்ஸ் அப்-க்கு தகவல் வந்தது. எடுத்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அது கவிதாவின் நிர்வாண புகைப்படமும் சங்கருடன் நெருக்கமாக இருந்த வீடியோவும்.
’கல்யாணம் பற்றி தொடர்ந்து வற்புறுத்தினால் இந்த வீடியோவை பேஸ்புக்கிலும் யு டியூப்பிலும் பதிவேற்றிவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளான் சங்கர். தான் ஏமாற்றப்பட்டோம் என்று பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து பிரச்னையை பேசி தீர்க்க சிக்மகளூர் சென்றார் கவிதா. அப்போதுதான், அந்த பங்களா வேறொருவருக்கு சொந்தமானது என்பதும் சங்கர் அங்கு வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. ஓனரிடம் பேசினார், கவிதா. அவருக்கு ஏற்கனவே இப்படி பல புகார்கள் வந்ததால் சங்கரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.
கவிதா அந்த புகைப்படங்களையும் வீடியோவையும் தந்துவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் சங்கர் தொடர்ந்து மிரட்ட, கவிதா துணை கமிஷனிரிடம் புகார் செய்தார். போலீசார் அந்த பேஸ்புக் நண்பனை தேடி வருகிறது.