'காதல் விவகாரத்தால் கோபம்' - சென்னையில் 7 பைக்குகள் எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
சென்னையில் 7 பைக்குகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை செய்த ஒரு சம்பவமே 7 பைக்குகள் பற்றி எரிந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்கள்: சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் 7 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பாலாகின. எரிந்த பைக்குகளுக்கு அருகே வாட்டர் பாட்டில் ஒன்றும் கிடந்தது. அந்த பாட்டிலில் பெட்ரோல் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனை வைத்து மர்ம நபர் யாரோ தீவைத்துச் சென்றாதாலே பைக்குகள் எரிந்துள்ளன என்பதை போலீசார் உறுதி செய்தனர். ஆனால், யார் தீவைத்தார்கள்? எதற்காக தீவைத்தார்கள்? எனப் புரியாமல் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது.
அருண் என்பவர் தன்னுடைய காதலியுடன் வசித்து வந்துள்ளார். இது அருணின் தந்தையான கர்ணனுக்கு பிடிக்கவில்லை. பலமுறை காதல் விவகாரம் குறித்து எச்சரித்தும் அருண் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. ஒருநாள் அருணும், அவரது காதலியும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனைப் பார்த்து கோபமான கர்ணன், அன்று இரவு பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார். சாலையில் நின்றுகொண்டிருந்த அருணின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அருண் பைக் மட்டும் எரிந்தால் சந்தேகம் வரும் என அருகில் உள்ள பைக்குகளையும் எரித்துவிட்டு கடலூருக்கு சென்றுவிட்டார்.
இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அருணின் காதலி, தனக்கு கர்ணனிடம் இருந்து கொலைமிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கொலைமிரட்டல் புகாரை கையில் எடுத்த போலீசாருக்கு அருண் பைக் எரிந்த விவகாரமும் தெரியவந்தது. அனைத்து புள்ளிகளையும் ஒன்று சேர்த்த போலீசார் கடலூரில் தங்கி இருந்த கர்ணனை கைது செய்து விசாரித்தனர். மகனின் மீது உள்ள கோபத்தால் பைக்குகளை எரித்ததாக கர்ணன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.