தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வருடம்தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மழைக்கால சீசனும், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஐய்யப்ப பக்தர்கள் சீசனும் களை கட்டுவது வழக்கம். இந்த இருவேறு சீசனின்போதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியல் போடுவர்.
இதனால் சீசன் காலகட்டத்தில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தருவதுண்டு. அச்சமயத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்தது. அத்திருடர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் முடிவில் இவர்களை போல ஏராளமான நபர்கள் குற்றாலம் பகுதியில் சீசன் காலகட்டங்களில் முகாமிட்டு, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் தலைமையின்கீழ் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வருவதை ஒப்புக்கொண்டுள்ளனர். அப்படி சீசன் காலகட்டங்களில் ராஜசேகர் தலைமையில் ஒரு குழுவாக குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து இது போன்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு அதனை ராஜசேகரிடம் கொடுத்து பணம் வாங்கிக் கொள்வதும் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, குற்றாலம் போலீசார் ராஜசேகர் குறித்து விசாரணை நடத்தி அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் ராஜசேகர் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற குற்றாலம் போலீசார், ராஜசேகரை கைது செய்து அவரிடம் இருந்த சுமார் 66 பவுன் தங்க சங்கிலிகளை மீட்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீசாரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் வெகுவாக பாராட்டினார்.