திமுக பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கு: சிறுவன் உட்பட 3 பேர் கைது
பாபநாசம் அருகே கும்பகோணம் மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலரின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரஜாக் (63) வெளிநாட்டில் இருந்து விட்டு, ஊருக்கு வந்து ராஜகிரியில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் ஹதிஜாபிவி கும்பகோணம் மாநகராட்சியில் தி.மு.க.வின் 3-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி அவரது மகன் முகமது ஆரிப் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவரது தந்தை காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு முகமதுஆரிப் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, இச்சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வடக்குமாங்குடி ஆற்றங்கரையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விஸ்வா (19) பாட்ஷா என்கிற ராஜசெல்வம் (29) மற்றும் சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அய்யம்பேட்டை போலீசார் அவர்களிடமிருந்து 24 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகையை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .