6 ஆயிரம் ரூபாய்க்காக நடிகை கொலையா? நீடிக்கிறது குழப்பம்!
வெறும் ஆறாயிரம் ரூபாய்க்காக நடிகை கொலைச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கொல்லப்பட்ட நடிகையின் தம்பி கூறியுள்ளார்.
இந்தி டி.வி. சேனல் நடிகை கிருத்திகா சவுத்ரி மும்பையிலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் கிருத்திகாவுக்கு போதைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. கிருத்திகா வீட்டுக்கு அடிக்கடி இரண்டு பேர் வந்து சென்றுள்ளனர். இருவரும் போதை மருந்து சப்ளை செய்பவர்கள் என்பதை போலீசார் அறிந்தனர். அவர்கள் கிருத்திகாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார்கள் என்றும் அது பணம் தொடர்பான பிரச்னை என்றும் அக்கம் பக்கத்து வீட்டினர் தெரிவித்தனர்.
இதையடுத்து போதைக் கும்பலைச் சேர்ந்த ஷகீல் நசீம் கான், பாட்ஷா மக்மலால் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், ரூ. 6 ஆயிரம் பிரச்னையில் கிருத்திகாவை கொன்றதாக போலீசார் கூறினர்.
இதுபற்றி கிருத்திகாவின் தம்பி தீபக் கூறும்போது, ’எனது சகோதரியின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு, ரூ.2 லட்சம். தோழி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார் கிருத்திகா. அதை அவள் ஒரு நாளும் திருப்பிக் கேட்டதும் இல்லை. இப்படியிருக்கும் போது போதை மருந்து விவகாரத்தில் ரூ.6 ஆயிரம் கொடுக்கவில்லை என்பதற்காக, இந்தக் கொலை நடந்திருக்கிறது என்பது நம்பும்படியாகவில்லை. போலீஸ் எதையோ மறைக்கப் பார்க்கிறது’ என்று கூறியுள்ளார்.
இவர் இப்படிக் கூறியுள்ளதால் இந்தக் கொலை வழக்கில் குழப்பம் நீடிக்கிறது.