
கொடைக்கானலில் 15 வயது சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தாக மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட்ம் கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்தவர் அற்புத தேவதாஸ். இவர், மாலைக்கண் நோயால் பாதிப்படைந்துள்ள நிலையில், இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், ராஜ்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவரை தோட்டங்களில் கூலி வேலைக்கு அழைத்து சென்று அவருடன் வீடுவரை சென்று நட்பாக பழகிவந்துள்ளனர்.
இந்நிலையில், வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வரும் வேளையில் அவரை அழைத்து வரும்போது அவருடன் சேர்ந்து மூன்றுபேரும் மதுபானம் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து அற்புத தேவதாஸின் மாலைக்கண் நோயை பயன்படுத்தி, மூவரும் அவரின் 15 வயது மகளுக்கு ஆசைவார்த்தை கூறி மதுபானம் கொடுத்து, போதையில் இருக்கும் சிறுமியை மூன்று பேரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த அவர்கள் மீது, அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, சிறுமியின் அத்தையிடம் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் குழந்தைகள் நல அமைப்பின் உதவியுடன் சிறுமியிடம் விசாரித்தபோது மூன்று பேரும் மாறி மாறி ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை உறுதி செய்த காவல்துறையினர் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.