திருமணமான 48 நாளில் மனைவியை கொலைசெய்துவிட்டு நாடகம் - விசாரணையில் சிக்கிய கணவர்
திருமணமான 48 நாளில் புதுபெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள வாழவந்திபுரத்தில் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைச் சேர்ந்த கிருஷ்டி ஹெலன்ராணி என்பவருக்கும் கடந்த 10-07-2020 அன்று திருமணம் நடைப்பெற்றது.
புதுமணத் தம்பதி இருவரும் வாளவந்தபுரம் பகுதியில் உள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இயற்கை உபாதையினை கழிக்க வீட்டிலிருந்து அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக சென்ற பெண் வீடு திரும்பவில்லை.
இதனால் கணவர் அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் உடலில் எவ்வித துணியுமின்றி சடலமாக கிடந்துள்ளார். அவர் அணிந்துயிருந்த நகைகள் மாயமாகி இருந்தது. அருள்ராஜ் குடும்பத்தார் சமயபுரம் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக லால்குடி டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து புதுப்பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வந்தனர்.
கணவர் அருள்ராஜ் மீது சந்தேகமடைந் போலீசார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் திடீர் திருப்பமாக கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. அருள்ராஜ் தனது மனைவி ஹெலன்ராணியை கொள்ளிடம் ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ஹெலன்ராணிக்கும் அருள்ராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் நீரில் அமுக்கி தன்னுடைய மனைவியை கொலை செய்ததாக அருள்ராஜ் ஒப்புக்கொண்டார்.
மேலும் கொலையான போது புதுப்பெண் அணிந்திருந்த நகைகள் மற்றும் கொலுசு ஆகியவற்றை கழட்டி அப்பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக அருள்ராஜ் கூறினார். அதைத்தொடர்ந்து நகைகள் மற்றும் கொலுசையும் கைப்பற்றிய போலீஸார் அருள்ராஜை கைது செய்தனர்.

