கடத்தப்பட்ட ஹோட்டல் அதிபர்: 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார் - 7 பேர் கைது

கடத்தப்பட்ட ஹோட்டல் அதிபர்: 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார் - 7 பேர் கைது

கடத்தப்பட்ட ஹோட்டல் அதிபர்: 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார் - 7 பேர் கைது
Published on

வத்தலகுண்டு ஹோட்டல் அதிபர் கடத்தல் வழக்கில், கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கார் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்தவர் அன்புச் செழியன். இவர், பெரியகுளம் சாலையில் நட்சத்திர ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அன்புச் செழியனுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் ஹோட்டல் சொத்து தொடர்பாக பிரச்னை தொடர்ந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் நேற்று மாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அன்புச் செழியனை மர்ம கும்பல் கடத்தி சென்று விட்டதாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் புறவழிச்சாலையில் சோதனையிட்ட போலீசார் அன்புச் செழியனின் ஒரு செருப்பு மட்டும் கிடப்பதை கண்டு கடத்தலை உறுதி செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மதுரை காரியாபட்டியில் உள்ள ஒரு வீட்டில் அன்புச்செழியன் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் புகுந்த போலீசார், அன்புச்செழியனை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து வத்தலக்குண்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி மற்றும் சிவா, விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன், விஜய், பேரையூர் வடிவேல், திருப்புவனம் மணி ஆகியோரை பிடித்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 7 பேரிடமும் கடத்தலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணையில் வெள்ளைச்சாமிக்கும் அன்புச் செழியனுக்கும் ஏற்பட்ட தகராறில் அன்புச்செழியன் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய வெள்ளைச்சாமி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் ஹோட்டல் அதிபரை உயிருடன் மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com