ஒரே மாதிரி திருட்டு யுக்தியால் மாட்டிக்கொண்ட கேரள தொடர் கொள்ளையன்: 226 சவரன் நகைகள் மீட்பு

ஒரே மாதிரி திருட்டு யுக்தியால் மாட்டிக்கொண்ட கேரள தொடர் கொள்ளையன்: 226 சவரன் நகைகள் மீட்பு
ஒரே மாதிரி திருட்டு யுக்தியால் மாட்டிக்கொண்ட கேரள தொடர் கொள்ளையன்: 226 சவரன் நகைகள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் மருத்துவர் வீட்டில் கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கேரளா மாநில கொள்ளையன் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 226 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2ஆம் தேதி பெண் மருத்துவர் ஜலஜா தேவகுமாரி என்பவர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 83 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே பகுதியில் மற்றுமொரு வீட்டில் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை திருடப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள், கொள்ளையில் ஈடுபட்ட நபர் பயன்படுத்திய யுக்தி உள்ளிட்டவைகளை கொண்டு விசாரணையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், கேரளா மாநிலத்தில் இதேபோன்று நடந்த கொள்ளையில் தொடர்புடைய நபரை சந்தேகத்தின்பேரில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவருக்கு இந்த கொள்ளை வழக்கில் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.

தொடர் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த 52 வயது ஜாய் என்பதும், அவர்மீது கேரள மாநிலத்தில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 வழக்குகளில் அவர் சம்பந்தபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அவரிடமிருந்து 226 சவரன் தங்க நகைகள் மீட்கபட்டுள்ளது.

இதுகுறித்து பேட்டியளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் கூறுகையில், ’’அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் கேரள மாநிலம் உட்பட பல பகுதிகளிலும் கொள்ளை வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், வடசேரி, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி காவல் நிலையங்களில் தலா 1 வழக்கும், கோட்டாறு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தக்கலையில் 1 வழக்கு என 4 ஆண்டுகளில் 12 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com