அடையாளம் தெரியாத சடலம் யாருடையது ? வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்த போலீஸார்
அடையாளம் தெரியாத நிலையில் எரிக்கப்பட்டு சடலமாக கிடந்தவர் யார் என்ற விவரங்களை வித்தியாசமான கோணத்தில் கேரள போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள மாவட்டம் திருச்சூர் வடக்கன்சேரி காவல் நிலையத்தில் ஒரு நபர் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் “ வெளியே சென்ற எனது மனைவி நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குரஞ்சேரி நெடுஞ்சாலை அருகே எரிக்கப்பட்ட ஒரு சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் வேறு ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என தேடினர். அப்போது சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவில் ஒரு தாலிச்சங்கிலி ஒன்றைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதனையடுத்து தாலிச்சங்கிலியில் பொறிக்கப்பட்ட பி.ஐ.எஸ் முத்திரையை வைத்து அந்தத் தங்கச்சங்கிலி ஒட்டப்பாலம் அருகே உள்ள கடையில் வாங்கப்பட்டது என்பதை போலீசார் ஆய்வுக்குட்படுத்தி தெரிந்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எரிக்கப்பட்டுக்கிடந்த சடலமானது புகார்கொடுக்கப்பட்டவரின் மனைவி என்பது உறுதிப்படுத்தபட்டது. இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல் துறையினர் குடும்பத்தாரிடம் தாலிச் சங்கிலியை ஒப்படைத்தனர்.

