கன்னியாகுமரி: மாணவியை திருமணம் செய்வதாக கூறிவிட்டு பின் தலைமறைவான இளைஞர் கைது
குமரி மாவட்டம் மங்காடு பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின் திருமணம் செய்தற்கு மறுத்து பின்னர் தலைமறைவாக இருந்த இளைஞரை குளசசல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவரது மகன் சதீஷ் (30). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், தனது வீட்டின் முன்பாக பள்ளிக்கு சென்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவியும் ஒரு கட்டத்தில் சதீஷ் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அவன் சொல்வதையெல்லாம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் அந்த மாணவியை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல் பல முறை நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து சதீஷ், அந்த மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சதீஷை பிடித்து விசாரணை நடத்தியபோது தான் அந்த மாணவியை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இருவரையும் சமாதானமாக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சதீஷ் கூறிய பேச்சை கேட்டு மாணவியின் உறவினர்கள் கடந்த டிசம்பர் மாதம் சதீஷ் வீட்டுக்கு கல்யாண பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர். அப்போது சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவி மற்றும் மாணவியின் உறவினர்கள் சதீஷின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் மகளிர் போலீசார் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சதீஷ் அவரது தாயார் சுந்தரி (70) மற்றும் சகோதரர் ரதீஷ் (38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த சதீஷ் தலைமறைவாகி இருந்தார். தலைமறைவாகி இருந்த சதீஷை பிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த போலீசார் 2 மாதங்கள் கடந்த நிலையில் நேற்று சதீஷை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.