கன்னியாகுமரி | வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை – கொள்ளையனை போராடி பிடித்த முதியவர்
செய்தியாளர்: சுமன்
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாசில்லாமணி (72). டிரைவரான இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில், மாசில்லாமணி தனது மனைவி சோபனாவுடன் இரவிபுதூர்கடை பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாசில்லாமணியின் சகோதரி கிருஷ்ணகுமாரி மற்றும் மனைவி சோபனா ஆகிய இருவரையும் இன்று அதிகாலை பேருந்தில் அனுப்பிவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார் மாசில்லாமணி.
அப்போது வீட்டு கதவின் பூட்டுகள் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது மூன்று கொள்ளையர்கள் வீட்டின் மேஜை டிராயர்களை உடைத்து அதில் இருந்த 50 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது மாசிலாமணி, சத்தம்போட்டு அவர்களை பிடிக்க முயன்ற போது அந்த கும்பல் கையில் இருந்த ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் போராடி அவர்களுடன் மல்லுக்கட்டிய மாசிலாமணி மூன்று கொள்ளையர்களில் ஒருவனை கீழே தள்ளி பிடித்துள்ளார்
இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் உதவியுடன் அந்த கொள்ளையனை பிடித்த நிலையில், மற்ற இரு கொள்ளையர்களும் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைத் தொடார்ந்து பிடிபட்ட கொள்ளையனை போலீசாரிடன் ஒப்படைத்த நிலையில் காயமடைந்த மாசிலாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திருப்பினார். இதனையடுத்து பிடிபட்ட கொள்ளையனிடம் தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.