காஞ்சிபுரம்: தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போனை பறித்ததாக 3 பேர் கைது
செய்தியாளர்: கோகுல்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ் (24). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 12 ம் தேதி பணி முடிந்து இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளூர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மொளச்சூர் அருகே வந்த போது, பைக்கில் வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி சாம்ராஜிடமிருந்து 40,000 மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், செல்போன் எண் டவர் பதிவை வைத்து, ஸ்ரீபெரும்புதூர் அருகே தலைமறைவாக இருந்த, எச்சூர் பகுதியைச் சேர்ந்த அஜய், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சேட்டு, சென்னை திருமழிசையைச் சேர்ந்த கௌதம் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போனை கைப்பற்றி அவர்களை சிறையில் அடைத்தனர்.